Tuesday, 1 October 2013

வேதத்தை ஏன் வாசிக்க வேண்டும்?


...
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே. - (சங்கீதம் 119:9).

ஒருஒரு வயதான முதியவர் தன் மகனுடைய குடும்பத்தோடும் பேர பிள்ளையோடும் வாழ்ந்து வந்தார். தினமும் காலையில் அவர் எழுந்து வேதாகமத்தை வாசிப்பது வழக்கம். அவருடைய பேரன் அவர் செய்வதுப் போல அவனும் தன் வேதாகமத்தை எடுத்து வாசிக்க முயற்சி செய்வது வழக்கமாக இருந்தது.
.
ஒரு நாள் பேரன் தன் தாத்தாவிடம், 'தாத்தா நீங்கள் செய்வதுப் போல நானும் வேதத்தை எடுத்து வாசித்துப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு அதில் ஒன்றும் புரியவில்லையே? அதுவும் நான் வேதத்தை மூடியவுடன் என்ன படித்தோம் என்பதையே மறந்து போகிறேனே ஆகையால் வேதத்தை வாசிப்பதால் என்ன பயன்? ' என்று கேட்டான்.
.
அப்போது அவனுடைய தாத்தா, தன் அருகில் இருந்த கரிகள் நிறைந்த கூடையிலிருந்து கரியை அனல் மூட்டும்படியாக அடுப்பில் போட்டு விட்டு, வெறும் கூடையை அவனுடைய கையில் கொடுத்து, 'நீ அருகில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீரை இந்த கூடை நிறைய எடுத்துக் கொண்டு வா' என்று அனுப்பினார்.
.
அதன்படி பேரன் அந்த கூடையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போய் தண்ணீர் கொண்டு வரும்போது, அவன் வீட்டிற்கு வருவதற்குள் தண்ணீர் எல்லாம் சிந்திவிட்டிருந்தது. தாத்தா அதை பார்த்து சிரித்தபடி, 'நீ இன்னும் கொஞ்சம் வேகமாக வரவேண்டியதாக்கும்' என்று கூறி, மீண்டும் அவனை தண்ணீர் கொண்டு வரும்படி சொன்னார்.
.
பேரன் திரும்பவும் வேகமாய் ஓடி, தண்ணீர் கொண்டு வந்தாலும், அவன் வீடு வருவதற்குள் அதிலிருந்து தண்ணீர் ஒழுகியிருந்தது. அதைப் பார்த்து பேரன், 'இந்த கூடையில் தண்ணீர் கொண்டு வருவது மிகவும் கஷடம், நான் ஒரு பக்கெட்டில் கொண்டு வருகிறேன்' என்றான். தாத்தா, 'எனக்கு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வர வேண்டாம், எனக்கு இந்த கூடையில்தான் தண்ணீர் வேண்டும்' என்றுக் கூறினார். பேரன் மீண்டும் தண்ணீர் எடுத்து வரப்போனான். தாத்தா வெளியே நின்று அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
.
பேரன் தன் தாத்தாவிற்கு முன்பாக வேகமாக ஓடி, தண்ணீரை மொண்டு வீட்டிற்கு ஓடி வருவதற்குள் தண்ணீர் எல்லாம் சிந்திப் போனதை கண்டு, தன் தாத்தாவிடம், 'பார்த்தீர்களா? நான் எத்தனை வேகத்துடன் போய் தண்ணீர் கொண்டு வந்தேன், ஆனால் எல்லாம் வீண், நான் வருவதற்குள் தண்ணீர் சிந்திப் போய் விடுகிறது' என்றுக் கூறினான்.
.
தாத்தா அவனை பார்த்து, 'நீ நினைக்கிறாயா இப்படி நீ கொண்டு வந்தது வீண் என்று? இந்தக் கூடையைப் பார்' என்றார். அப்போதுதான் அந்த பேரன் அந்தக் கூடையைப் பார்த்தான். அழுக்கு நிறைந்திருந்த, கரிகளால் கறுப்பாயிருந்த அந்தக் கூடை இப்போது பளீரென்று அதன் உட்புறமும் வெளிப்புறமும் சுத்தமாகி இருந்தது.
.
தாத்தா சொன்னார், 'இதைப்போலத்தான் நீ வேதம் வாசிக்கும்போது, ஒன்றும் புரியாமலிருக்கலாம், அல்லது மறந்துப் போகலாம், ஆனால் நீ வாசிக்க வாசிக்க அது உன்னை உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சுத்தமாக்குகிறது. ஏனென்றால் பரிசுத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் புடமிடப்பட்ட, ஜீவனுள்ள வார்த்தைகள், ஆகையால் நீ தொடர்ந்து வேதத்தை தினமும் வாசி' என்றுக் கூறினார்.
.
'கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது' (சங்கீதம் 12:6) என்று வேதம் கூறுகிறது. அந்த சுத்த சொற்களை நாம் வாசிக்க வாசிக்க நாமும் சுத்தமாகிறோம். மட்டுமல்ல, 'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது' (எபிரேயர் 4:12) என்று பார்க்கிறோம்.
.
தேவனுடைய வார்த்தைகள் ஜீவனுள்ளது. அது இன்றும் ஒவ்வொருவருடனும் இடைபடுகிறது, பேசுகிறது, கண்டித்து உணர்த்துகிறது, ஆசீர்வதிக்கிறது, ஆறுதல்படுத்துகிறது. நமது இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறது. அப்படிப்பட்ட அற்புத வார்த்தைகள் நம் தாய் மொழியில் நாம் கொண்டிருப்பது நம்முடைய பாக்கியமே!
.
அந்த அற்புத வார்த்தைகளை கொடுத்த தேவனை ஸ்தோத்தரிப்போம். ஒவ்வொரு நாளும் நான் அதை வாசித்து இந்த அற்புத வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம் என்றுக் கூறி, வேதத்தை முத்தமிடுவது வழக்கம். நாமும் தினமும் வாசிப்போம், சுத்தமாக்கப்படுவோம், கர்த்தருக்காய் ஜீவிப்போம். ஆமென் அல்லேலூயா! 

.
 
வேதத்திலே வேதத்திலே
விலைமதியா முத்துக்கள் உண்டு
தினந்தோறும் அம்முத்துக்களைப் பார்
மெய்யாகவே நீயும் ஓர் முத்தாய் மாறுவாய் 
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தேவரீர் எங்களுக்கு எழுதிக் கொடுத்த தேவ வார்த்தைகளாகிய வேத புத்தகத்திற்கு நன்றி சொல்லுகிறோம். வேத புத்தகம் எங்கள் கையில் கிடைத்த புதையலாகவே நாங்கள் விசுவாசிக்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நாங்கள் அதை வாசிக்கும்போது, அது எங்களை சுத்தப்படுத்துவதற்காகவும், எங்களை சரி செய்வதற்காகவும், எங்களை ஆசீர்வதிக்கிறதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து, உம்மை அதிகமாய் பற்றிக் கொள்ள ஒவ்வொருவருக்கும் கிருபை அருளும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

குருடாயிருக்கும் மனக்கண்கள்


...
மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். - (யோவான் 16:2-3).

கென்யாவில் உள்ள நெய்ரோபியில் ஷாப்பிங் மாலில் அங்கு இருந்த சாதாரண மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, 68 பேருக்கும் மேலாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். அநேகர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
.
ஈராக்கில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள். சிரியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள். ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
.
ஞாயிற்றுக் கிழமை ஆலயத்திற்கு சென்று, ஆராதனை முடிந்து வெளியே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலைப்படையை சேர்ந்த இருவர் தாக்கியதில் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் 70பேருக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். 130 பேருக்கு மேலாக காயம் அடைந்திருக்கிறார்கள். ஆலயத்தின் முன்புறம் ஏராளமாய் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது.
.
தீவிரவாத சக்திகளுக்கு, மனித உயிரின் அருமையை அறியாதபடி அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால், அருமையான உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு முன்பே இயேசுகிறிஸ்து இவர்களைப் பற்றி 'மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்' என்று சொல்லி விட்டார். கொலை செய்கிறவர்கள் கிறிஸ்துவையும், பிதாவையும் அறியாபடியினால் இப்படி செய்வார்கள் என்று காரணத்தையும் அவரே சொல்லி விட்டார்.
.
காலாகாலமாய் நாம் இதுப் போன்ற தீயசக்திகள் சாதாரண மக்களை கொல்வதுப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது இதுப் போன்ற செய்திகள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கின்றன. இயேசுக்கிறிஸ்து கடைசிக் கால நிகழ்ச்சிகளைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறும்போது, 'ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; .. உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்' (மத்தேயு 24:7,9) என்றுக் கூறினார். அதன்படி இந்த நாட்களில் நடந்து வருகிறது.
.
இதற்கு விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நாம் ஜெபிக்க வேண்டும். தீவிரவாதிகளின், மதவாதிகளின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். 'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்' (2கொரிந்தியர் 4:4).  இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் குருடாக்கியருக்கிற இவர்களின் மனக்கண்களை கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கும்படியாக இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பார்வையற்ற மனிதனால் இயற்கை காட்சிகளையோ, நிறங்களையோ, அழகையோ இரசிக்க முடியாது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனம் குருடாகியிருக்கிற இந்த மனிதர்களுக்கு மனிதனின் ஆத்துமாவின் அருமையோ, உயிரின் விலையே தெரியாது. ஆனால் அவர்களின் மனக் கண்கள் திறக்கப்படும்போது, அவர்கள் அதன் அருமையை அறிந்துக் கொள்வார்கள். ஆகவே அவர்களின் மனக்கண்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியைக் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
இரண்டாவது, சுவிசேஷம் அவர்களை சென்றடையும்படியாக வாசல்கள் திறக்கப்படும்படியாகவும், அவர்களை நற்செய்தி சென்றடையும்படியாகவும் ஜெபிக்க வேண்டும். 'அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?' (ரோமர் 10:14). ஆகவே அவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்படும்படியாக வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சத்தியத்தை கேள்விப்பட்டு, அவரை விசுவாசிக்கத்தக்கதாக ஜெபிக்க வேண்டும்.
.
மூன்றாவதாக, நாம் நம் சாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் பாவத்தின் மேல் பாவம் செய்துக் கொண்டு, கிறிஸ்துவை பிரசங்கித்தால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துக் கொண்டோ, மற்றவர்கள் கேட்கும் சாதாரண உதவிக்கூட செய்யாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சொன்னால் அவர்கள் விசுவாசிப்பார்களா? நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக வாழ்ந்தால் நம்மைக் காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவைக் காண்பார்களல்லவா? இருளில் வாழும் அவர்களுக்கு வெளிச்சமாக நம் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். 'இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16).
.
பிரியமானவர்களே, இவற்றை நாம் உண்மையாக செய்வோமானால் தீவிரவாத சக்திகள் செயலற்றுப் போகும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி செய்பவர்களாக நம்மை மாற்றுவோம். கர்த்தர் மற்றவற்றை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! 

.
 
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடகத்தால் நாம்
பிசாசை வென்றிடுவோம்
.
 வெற்றிக் கொடி பிடித்திடுவோம்
வீரநடை நடந்திடுவோம் 
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாகிஸ்தானில் எங்கள் சகோதர சகோதரிகள் அநியாயமாய் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு கலங்கி இருக்கிற எங்களையும், தங்கள் உயிருக்குயிரானவர்களை இழக்க கொடுத்த ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்துவீராக. இந்த துர்ச்செயலை செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியையும் சந்திப்பீராக. குருடாயிருக்கிற அவர்களின் மனக்கண்களை திறப்பீராக. அவர்கள் சுவிசேஷத்தை கேட்கும்படியாக திறந்த வாசலை அவர்களுக்கு முன் வைப்பீராக. அவர்கள் கேட்டு, மனம் திரும்பும்படியாக ஆவியானவர்தாமே கிரியை செய்வாராக. நாங்கள் எங்கள் சாட்சிகளை காத்துக் கொண்டு அவர்களுக்கு முன்பாக உம் அன்பை வெளிப்படுத்தும்படியாக எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

தேவா நான் எதினால் விசேஷித்தவன்?


....
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். - (லூக்கா 12:7).

ஒரு போதகர் ஒரு நாள் தன் சபையில் ஒரு 500 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்று கேட்டார். மெதுவாக கைகள் உயர தொடங்கியது. அப்போது அவர் ' உங்களில் ஒருவருக்கு இந்த ரூபாய் நோட்டை நான் கொடுக்க போகிறேன், அனால் அதற்கு முன்னால், நான் ஒரு காரியத்தை செய்ய விரும்புகிறேன்' என்றார். எல்லாரும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
அவர் அந்த ரூபாய் நோட்டை எடுத்து, கசக்கி, ஒரு பந்தை போலாக்கி, 'இப்போது யாருக்கு வேண்டும்?'என்று கேட்டார். அப்போதும் அநேகருடைய கரங்கள் உயர்ந்தது.  அவர், நான் 'இப்போது ஒரு காரியம் செய்ய போகிறேன்' என்று சொல்லி, அந்த நோட்டை காலின் கீழ் மிதித்து நசுக்கி, பின் அதை எடுத்து, 'இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு?' என்று கேட்டார். அப்போதும் கரங்கள் உயர்ந்தன.
.
அப்போது அவர், தன் சபை மக்களை நோக்கி, 'இன்று நீங்கள் பெரிய பாடத்தை கற்று கொள்ள போகிறீர்கள்' என்று சொல்ல ஆரம்பித்தார். 'இந்த பணத்தை நான் என்ன செய்தாலும், நீங்கள் அதை பெற விரும்பினீர்கள். ஏனென்றால் நான் என்ன செய்தாலும், அந்த பணத்தினுடைய மதிப்பு குறைய போவதில்லை. அது 500 ரூபாய் நோட்டாகத்தான் இருக்கும். அதுப்போல உங்கள் வாழ்விலும் நீங்கள் கசக்கப்பட்டு, காலின் கீழ் மிதிக்கப்பட்டு, எல்லாராலும் தள்ளப்பட்டும் இருக்கலாம். ஆனால் கர்த்தரின் கண்களில் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள். உங்கள் ஆத்துமாவின் மதிப்பு மாறப்போவதேயில்லை' என்று கூறினார்.
.
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை எதற்காக மண்ணுக்கு மண்ணாக போகிற, மண்ணான நமக்காக ஜீவாதார பலியாக தர வேண்டும்? ஏனெனில் அவருக்கு தெரியும், நம் ஒவ்வொருவரின் ஆத்துமாவும் எவ்வளவு விலையேறப்பெற்றது என்று. அந்த விலையேறப்பெற்ற ஆத்துமா சாத்தானின் கைகளில் சிக்கி, நரகத்துக்கு சென்று விடக்கூடாதே என்று தான் அவர் நம்மேல் வைத்த அன்பின் நிமித்தமாக தம்முடைய சொந்த குமாரனையே நமக்காக கொடுத்தார். அவர் அன்புதான் எத்தனை பெரியது!
.
ஒருவேளை நான் எதற்கும் தகுதியில்லாதவன், எதற்கும் பிரயோஜனமில்லாதவள் என்று நீங்கள் உங்களை குறித்து எண்ணி கொண்டு இருக்கிறீர்ளோ? எப்படி அந்த 500 ரூபாய் நோட்டு எத்தனைத்தான் கசக்கப்பட்டு, காலின் கீழ் மிதிக்கப்பட்டாலும் அதன் மதிப்பு மாறததாய் இருக்கிறதோ, அதுபோல உங்கள் ஆத்துமாவும் அதன் மதிப்பு என்றும் மாறாதது. விலையுயர்ந்தது. படும் பாடுகள், துன்பங்கள், பிரச்சனைகள் எது வந்தாலும் உங்கள் ஆத்துமா விலையேறப்பெற்றது. அதை ஆண்டவர் வசிக்கும் இடமாக அவருக்கு கொடுத்து விடுங்கள். அவர் அதில் ஆட்சி செய்து, அதை இன்னும் விலையுயர்ந்தாக மாற்றி விடுவார்.
.
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26) என்று வேதம் கேட்கிறது. ஒரு வேளை மாவீரன் அலெக்சாண்டரை போன்று உலக முழுவதையும் தன் கால்களுக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவன் முயற்சித்து, அதன்படி செய்தாலும், அவன் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? ஒன்றுமே இல்லை. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? உலகத்தை கொண்டு வந்து, கர்ததருடைய பாதத்தில் வைத்து, 'இதோ உலகத்தையே நான் ஜெயித்தேன், என்னுடைய ஜீவனுக்கு பதிலாக இதை வைத்து கொள்ளும்' என்று நியாயத்தீர்ப்பின் நாளிலே அவன் சொல்ல முடியுமா? கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும் (நீதிமொழிகள் 11:4) என்று பார்க்கிறோம். நியாயத்தீர்ப்பின் நாளில் பணமோ, ஐசுவரியமோ, புகழோ எதுவும் உதவாது. கர்த்தரை ஏற்று கொண்டு அவருடன் வாழ்வதே அந்நாளில் மரணத்திலிருந்து தப்புவிக்கும்.
.
அநேக ஐசுவரியத்தை பார்க்கிலும், அநேக அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும், அநேக உலக காரியங்களை பார்க்கிலும் விசேஷித்ததாகிய நம் ஆத்துமாவை குறித்து நாம் எச்சரிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். உலகத்தின் எல்லா வெற்றியையும் அடைந்து, ஆனால் நம் ஆத்துமாவை நாம் இழந்து போவோமானால், அதை காட்டிலும் பரிதாபம் வேறு எதுவும் இல்லை. ஆத்தும இரட்சிப்பை தேவன் அருமையாக எண்ணுகிறபடியினால், அந்த விசேஷித்த இரட்சிப்பை பெற்று, விசேஷித்த நம் ஆத்துமாவை பரலோகத்திற்கு பாத்திரவான்களாக ஈடேற செய்வோம். ஆமென் அல்லேலூயா!
.
தேவா நான் எதினால் விசேஷித்தவன் 
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் அது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
...
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும் 
என் நேசர் என்னோடுண்டு           
...
தேவா நான் எதினால் விசேஷித்தவன் 
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் அது எதினால்
நீர் என்னோடு இருப்பதனால்
 
 
ஜெபம்
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய நல்ல தகப்பனே, உலகத்தின் எந்த மேன்மையான காரியங்களை பார்க்கிலும் விசேஷித்ததாகிய எங்கள் ஆத்துமாவை குறித்து நாங்கள் கவலையற்றவர்களாக இல்லாதபடி, அதை குறித்து நாங்கள் கவனமாக இருக்கவும், எங்கள் ஆத்தும இரட்சிப்பை தருகிற உம்மிடத்தில் எங்களை அர்ப்பணித்து, நீர் வந்து ஆளுகை செய்யும் இடமாக எங்கள் இருதயத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். நீர் எங்களில் வந்து இருக்கும்போது எங்களை நீர் விசேஷித்தவர்களாக மாற்றுகிற தயவிற்காக உமக்கு நன்றி.    எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

மேசியா இயேசு இராஜா


....
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,  அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார்,  உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். - லூக்கா 1:31,32).

2000 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு யூதனும் தங்களுக்கு ஒரு மேசியா அனுப்பப்பட வேண்டும் என்றும், அவர் வந்த அவர்களை ரோம பேரரசின் கைகளிலிருந்து விடுவிப்பார் எனவும் விசுவாசித்து, தங்கள் யெகோவா தேவனிடம் அவர்கள் தினமும் வேண்டி வந்தனர். அப்போது அந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு வாலிப பெண்ணின் கனவும், தான் அந்த மேசியாவின் தாயாக வேண்டும் எனவே இருந்தது.
.
அக்கால கட்டத்தில் ஒரு தூதன் வந்து மரியாளுக்கு தன்னை வெளிப்படுத்தி,  மேசியா அவர்கள்; மூலம் பிறப்பார் என்று கூறியபோது அவர்கள்; எப்படியாய் மகிழ்ந்திருப்பார்கள்? அவர்கள் யோவான் ஸ்நானகனின் தாயாரை காண சென்ற போது அவர்கள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அதை வெளிப்படுத்தியது,  '..அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்;  இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.. ' என கூறினார்கள். அவர்களுடைய தாழ்மையை, பரிசுத்தத்தை கர்த்தர் பார்த்து அவர்கள் மூலமாக இந்த உலகத்திற்கு மேசியாவை அனுப்பினார்.
.
உலக முழுவதும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடி முடித்த இந்த நாட்களில்,  பிதாவாகிய தேவனுக்கு சமமான இயேசுகிறிஸ்து ஏன் இந்த உலகத்தில் மனிதனாய் பிறந்தார்?  என்று நாம் தியானிப்பது இன்றியமையாதது.
.
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது என்று எபிரேயர் 9:22-ல் பார்க்கிறோம். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு எனனும் முற்பிதாக்களின் காலத்தில் பலிபீடத்தை கட்டி அங்கு ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தையும் தேவன் குறிப்பிட்ட பலிகளையும் செலுத்தி வந்தனர். சாலமோன் காலத்தில், தேவாலயம் கட்டப்பட்டு,  அங்கு பலிகள் செலுத்தப்பட்டு,  பாவ பிரயாசித்தம் செய்யப்பட்டது. தேவாலயம் இடிக்கப்பட்ட போதோ பலிகளும் காணிக்கைளும் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இன்று வரை பலிகள் செலுத்தப்படவில்லை. இயேசுகிறிஸ்துவுக்கு பின் கி.பி. 70-ல் தீத்து இராயானால் எருசலேமும், ஏரோது ராஜா கட்டின தேவாலயமும் இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி இடிக்கப்பட்டபின், அங்கு பலிகள் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஏனெனில் இயேசுகிறிஸ்து தம் இரத்தத்தை சிந்தி பாவத்தை தீர்த்தபடியால் மீண்டும் இரத்தம் சிந்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.
.
தேவன்,  உலக தோற்றத்திற்கு முன் அடிக்கப்பட்ட தேவாட்டுக்குட்டியான இயேசுகிறிஸ்துவை இந்த பாவ உலகத்திற்கு பாவத்தை சுமந்து தீர்க்கும் கிருபாதார பலியாக அனுப்ப சித்தம் கொண்டார். ஏனெனில்,  அவருடைய இரத்தம் மாத்திரமே பாவமில்லாதது. பரிசுத்தமானது. தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால்,  தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த பாவ உலகின் மாந்தர் மீட்கப்பட வேண்டி அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.  இயேசுகிறிஸ்து,  வெள்ளாட்டுக்கடா,  இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து,  நித்திய மீட்பை உண்டுபண்ணினார். - (எபிரேயர் 9:12).
.
பரிசுத்தரும்,  குற்றமற்றவரும்,  மாசில்லாதவரும்,  பாவிகளுக்கு விலகினவரும்,  வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும்,  பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்(எபிரேயர் 7:26,27).  அதற்காகவே அவர் பிறந்தார். 2000 வருடங்களுக்கு முன்பாக அவர் நமது பாவங்களுக்காகவும், நமக்கு முன் இருந்தவர்களின் பாவங்களுக்காகவும்,  நமக்கு பின் வரும் சந்ததியின் பாவங்களுக்காவும்,  ஒரே தரம் பிறந்து,  பாவங்களுக்காக தம்மை தாமே பலியிட்டு, எல்லாருடைய பாவங்களையும் நீக்கி சுத்திகரித்ததினால்,  நம் பாவம் நீங்கிற்று. நமக்கு ஆத்தும மீட்பு உண்டாயிற்று. பாவிகளாயிருந்த நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் தேவன் மாற்றினார்.
.
இயேசுகிறிஸ்து பிறந்த போது, சத்திரத்தில் இடமில்லாதபடியால், ஒரு மாடடையும் கொட்டிலில் ஏழை கோலமாய் பிறந்தார். அவர் மீண்டும் வர போகிறார். ஆனால் ஏழை கோலமாக அல்ல, இராஜாதி இராஜனாக கர்த்தாதி கர்த்தராக நியாயம் தீர்க்கிறவராக வரப் போகிறார். ஆமென் அல்லேலூயா!
.
ஆனால் நாம் இன்னும் அவரை சிறு குழந்தையாகவே நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால்தான்,  தூங்கு தூங்கு பாலா நீ என்று இன்னும் பாடி கொண்டிருக்கிறோம். அவர் இன்னும் பாலகனல்ல,  பாவத்தையும் சாபத்தையும்,  மரணத்தையும் வென்ற ராஜாதி ராஜா! நம் பாவங்களை சிலுவையில் சுமந்து தீர்த்தவர்,  மீண்டும் வரும்போது நம்பாவங்களை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாக வரப்போகிறார். அதை மனதில் கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!
.
மேசியா இவர்தானோ நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ? 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கும் நல்ல தகப்பனே, நீர் எங்கள் மேல் வைத்த அநாதி அன்பினால், தம்முடைய ஒரே பேறான குமாரனை எங்களுக்காக தந்தருளினீரே, உமக்கு ஸ்தோத்திரம். தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, எங்களுக்கு பரலோகத்திற்கு செல்லும் வழியை காட்டி,  எங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து,  அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் மரித்தோரிலிருந்து எழுந்து,  இப்போதும் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து,  எங்களுக்காக பரிந்து பேசி கொண்டிருக்கும் அன்பிற்காக கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். மீண்டும் வரப்போகிற இராஜாதி இராஜாவிற்காக நாங்கள் ஆவரோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். சீக்கிரம் வாரும் சுவாமி. எங்களை உம்மோடு சேர்த்துகொள்ளும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தரின் சிட்சை


.
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். - (எபிரேயர் 12:6).

ஒரு பெரிய கட்டிடத்தை கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிட மேஸ்திரி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து சித்தாளை கூப்பிட நினைத்து சத்தமாக கத்தினார். சித்தாளின் காதுகளில சத்தம் விழவில்லை. மறுபடியும் கூப்பிட்டார். பலனில்லை. போதாத குறைக்கு இயந்திரங்களின் சத்தங்கள் அவரின் காதை அடைத்தது. மேஸ்திரி வேறு வழியின்றி ஒரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் போட்டார். திடுக்கிட்டு, திரும்பி பார்த்த சித்தாள், 'என்ன வேண்டும் ஐயா?' என்று கேட்டான். மேஸ்திரி,  'மேலிருந்து பெரிய கிரானைட் கல்லை இறக்குகிறோம். அதனால் உன்னை கொஞ்சம் விலகி நிற்க சொன்னேன்' என்றார்.
.
இதேப்போலத்தான் ஆண்டவர் நம்மிடம் பேசும்போதெல்லாம் நம்முடைய பாவம் என்னும் தூரம் அந்த உறவை தடுக்கிறது. அதோடு கூட இவ்வுலகத்தின் ஆசைகள், துர்க்குணங்கள், அவர் அழைக்கும் குரலை கேட்கக்கூடாதபடிக்கு நம் காதுகளை அடைத்து விடுகின்றன. ஆகவே தேவனும் வேறு வழியின்றி கற்கள் போன்ற சில சிட்சைகளை அனுப்புகிறார். இந்த சிட்சையின் நிமித்தமாகவாவது என் மகன், மகள் என்னை நோக்கி பாக்கமாட்டானா? என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். தேவனின் நோக்கம் என்ன? இந்த சிறு கல்லை போட்டால் என் பிள்ளையை பெரிய கல்லாகிற பாதாளத்திற்கு விலக்கி தப்புவித்து விடலாம் என்பதே.
.
பிரியமானவர்களே, தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிருங்கள், அவரால் கடிந்து கொள்ளப்படும்போது சோர்ந்து போகாதீர்கள். தகப்பன் சிட்சியாத பிள்ளை உண்டோ? நாம் அவரது பிள்ளைகள் என்றால் நிச்சயமாக நாம வழிதப்பி நடக்கும்போது, அவர் நம்மை சிட்சிப்பார். அந்த சிட்சையில நாம செய்ய வேண்டியது என்ன? தேவனை நோக்கி பார்க்க வேண்டும். 'நான் சரி செய்ய வேண்டிய காரியம் என்ன? மாற்றி கொள்ள வேண்டிய குணநலன் என்ன?' என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேதத்தை வாசிக்கும்போதும் தேவனுடைய வார்த்தையை கேட்கும்போதும்,அவர் சுட்டிக்காட்டுகிற உணர்த்துகிற காரியங்களை விட்டுவிட வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
.
மருத்துவ உலகம் என்ன சொல்லுகிறது? 'எந்த ஒரு பெரிய வியாதியும் முன் அறிகுறிகளின்றி திடீரென்னு வருவதில்லை. சிறுசிறு கோளாறுகள் தெரியம்போதே உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் பெரிய ஆபத்திற்கு தப்பிக்கலாம்' என்பதே. ஆம், இது நம் ஆவிக்குரிய வாழ்விலும் உ;ணமை. சிறிய சிட்சையில் நம்மை திருத்தி கொண்டால், வரப்போகும் பேராபத்திற்கு தப்பித்து கொள்ளலாம். ஒரு நாள் வரப்போகிறது. அந்நாளில் நாம் செய்யும சகல காரியமும் நியாயத்தில் கொண்டு வரப்படும். அப்போது நாம் செய்யும் அநியாயமான, துர்க்காரியங்களுக்கு நித்திய நரகம் என்னும் பேராபத்து உண்டு.  அதற்கு தப்புவிக்கவே இந்த சிட்சை கர்த்தர் அனுமதிக்கிறார். ஆகவே அவரது குரலுக்கு செவிசாய்த்து அவரது பாதையில் நடப்போம், நித்திய ஜீவனை சுதந்தரித்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
.
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்கவல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கும் நல்ல தகப்பனே, நீர் எங்களை அதிகமாய் நேசிக்கிறபடியால் சிறு சிறு சிட்சைகளை அனுமதிக்கிறீரே உமக்கு நன்றி. அந்த சிட்சைகளில் நாங்கள் சோர்ந்து போய் விடாதபடி, எங்களுக்கு பெலனை கட்டளையிடும். சோதனை வேளையில், எங்களிடத்தில் காணப்படும் தவறுகளையும், தேவன் உணர்த்துகிற காரியங்களையும் நாங்கள் ஆராய்ந்து அவைகளை விட்டுவிட கிருபை பாராட்டும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.